அம்மாவின் ஆன்மிக விதைப் பயணங்கள்
இரு தொண்டர்கள் காபி, தேநீர் சாப்பிட மாட்டார்கள்.
ஒரு தொண்டர் சென்னையைச் சேர்ந்தவர். ஏங்க நீங்க எல்லாம் காபி சாப்பிடுங்க. அந்த நேரத்தில் காபி சாப்பிடாத நாங்க ரெண்டு பேரும் போய் மெட்ராசுக்குப் போன் செய்து பார்த்து நாளைக்கு நாங்கள் அங்கு வராமலேயே எங்கள் வேலையை முடித்துக் கொள்ள முடியுமா? எனக்கேட்டு அவர்கள் முடியும் என்றால் நானும் உங்கள் அனைவரோடும் ஊருக்கு வருகிறேன் என்று அவரது சென்னை அலுவலகத்துக்கும் போன் செய்வதற்காகப் புறப்பட்டு விட்டார்கள்.
விசாரித்ததில் போன் செய்ய வேண்டுமானால் சுமார் 2 கி.மீ தூரம் செல்ல வேண்டும். அதனால் அவர்களிருவர் மட்டும் ஒரு வண்டியை எடுத்துக் கொண்டு சென்று விட்டார்கள்.
அந்த இடம் போக்குவரத்து மிக நெரிசலான பகுதி என்பதனால் அவர்கள் தங்களுடைய வண்டியை ஒரு சிறிய பாதையில் ஒதுக்குப்புறமாக நிறுத்திவிட்டு அங்குள்ள காவல் துறையினரை அணுகிக் கேட்டபொழுது அவர்கள் இன்னும் சற்றுத் தொலைவிலுள்ள ஒரு கட்டிடத்தைக் காண்பித்து அங்கு சென்று போன் செய்யுமாறு கூறினார்கள்.
பக்கம்தானே என எண்ணி அவ்விரு தொண்டர்களும் நடந்தே சென்று கொண்டிருக்கும் வேளையில் ஒரு வெள்ளை நிற ‘மாருதி வேன்’ ஒன்று அசுர வேகத்தில் வந்து ஒருவர் மீது இந்நேரம் மோதியிருக்க வேண்டும்.
நல்லவேளை அத்தொண்டர் ஏதோ ஒரு உணர்வு பெற்று ஒதுங்கிக் கொண்டதால் உயிர் பிழைத்தார்.
அம்மாவுக்கு மனதில் நன்றி கூறிவிட்டு மறுபடியும் நடக்க ஆரம்பித்தபொழுது மறுபடியும் அந்த வேன் அவர்கள் மீதே மோத வந்தது.
மறுபடியும் ஒதுங்க மறுபடியும் மோத வரவேதான் அவர்களுக்கு மனதில் உதிர்த்தது, அந்த வேன் நம் மீது வேண்டுமென்றே மோத வருகின்றது என்பது.
எனவே அவர்கள் உடனே நடைபாதை மேடையில் சட்டென ஏறிக் கொள்ளவே அந்த வேன் ‘திட்டு’ மீது மோதி நின்றதுதான் தாமதம்.
உள்ளே இருந்த இருவர் சடாரெனக் கதவைத் திறந்து, ‘ஏண்டா டேய்...’ என ஆரம்பித்து நாக்கூசுகின்ற மிகத் தரக்குறைவான வார்த்தைகளால் படுமட்டரகமாக அர்ச்சித்தார்கள்.
அத்தொண்டர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. இவர்கள் நம்மை ஏன் இடிக்க வந்தார்கள்? எதற்காகத் திட்டுகிறார்கள்? என்ன காரணம் என்றே புரியவில்லை.
‘அம்மா! இது என்ன சோதனை’ என எண்ணியபோதுதான் வசை பாடியவர்கள் வாயிலிருந்து வந்தது அதற்கான விடை. ‘டேய் மைசூர்ல ஒங்க திறமையைக் காட்டினீங்கடா... இது எங்க பேட்டை. ஒங்கள நீங்க தங்கியிருக்கிற எடத்துக்கே படையோட வந்து உங்களையெல்லாம்.... மா? இல்லையா பாருங்கடா...?’ என்று மறுபடியும் மகா மட்டரகமான வார்த்தைகளால் கொட்டி விட்டு ‘சர்’ரென்று வேனை ஓட்டிச் சென்றனர்.
இப்பொழுது அத்தொண்டர்களுக்கு ஒரு குழப்பம். இது யாரோ இரண்டு பேர் குடித்துவிட்டு கலாட்டா செய்ததைப் பெரிதாக எடுத்துக் கொண்டு மறுபடியும் அம்மா தங்கியிருக்கும் விடுதிக்குச் சென்று சொல்லிக் களேபரப்படுத்துவதா?
அல்லது இவர்கள் கையாலாதவர்கள் என நினைத்து நாம் போய், பெரிய கலாட்டா செய்து விட்டால் என்ன செய்வது? என்பதுதான் அக்குழப்பம்.
எது எப்படியிருந்தாலும் சரி, நமக்குத் தெரிந்தபின் நாம் சும்மா இருப்பது சரியல்ல. அதனால் நாம் பழையபடிக்கு ஓட்டலுக்குச் சென்று உஷார் படுத்திவிடுவதுதான் நல்லது என்று பழையபடி திரும்பி நடந்து வந்து வேறிடத்தில் நிறுத்தி வைத்திருந்த வண்டியை எடுத்துக் கொண்டு அனைவரும் தங்கியிருந்த இடத்திற்குச் சென்றனர்.
அங்கு சென்று பார்த்தால் ஒரே நிசப்தம். அத்தனை கார்களும் அமைதியாக நின்று கொண்டிருந்தன.
விசயத்தைக் கேள்விப்பட்டு அங்கு அக்கம்பக்கத்திலிருந்த உள்ளூர் வாசிகளும், பணியாளர்களும், ‘சக்தி... நீங்க ஏங்க கவலைப்படறீங்க... எங்களை மீறி யாரும் ஒங்கள ஒண்ணும் செய்ய முடியாது. அதற்கு மீறி ஏதேனும் நடக்க வேண்டுமென்றால் எங்களனைவரின் கடைசி சொட்டு ரத்தத்தையும் மீறித்தான் யாரேனும் உங்களை ஏதாவது செய்து விட முடியும்’ என்றதுமே எங்கள் அனைவரின் கண்களும் நனைந்தன.
சொல்லி வைத்தாற் போல் அவர்கள் ஒரு பெருங்கூட்டத்தோடு அணிவகுத்து வந்தார்கள்.
அவர்கள் அத்தனை பேரையும் வாசலிலேயே தடுத்து நிறுத்திய போதுதான் தெரிந்தது, அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கி வந்தது நமது தொண்டர்களோடு சண்டையிட்டது வேறு யாருமல்ல, அந்நகரின் பிரபலமான செல்வாக்குள்ள ஒரு பெரும்புள்ளியின் புதல்வரும், டிரைவரும் என்பது.
உடனே நம் நண்பர்கள், அந்நேரத்திற்கு அந்தப் பெரும்புள்ளியைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நடந்த விபரத்தைக் கூறியபோது அவர் கூறியது, ‘என்ன என் மகன் அம்மாவோடு வந்தவர்களோடா சண்டையிட்டான். அவன் சார்பாக நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து நடந்ததையெல்லாம் இந்நேரத்திற்கு அம்மாவுக்குத் தெரிவித்து அம்மாவைத் தொந்தரவு செய்யாதீர்கள். நானே காலையில் நேரில் அம்மாவிடம் வந்து அம்மா என் மகன் இப்படி நடந்ததற்காக மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன்.’
சற்று முன்பு வரை முரடர்களைப் போலிருந்த அவர்கள் மிகவும் மென்மையானவர்கள் போல் மாறித் தங்கள் செயலுக்கு வருத்தமும் தெரிவித்துச் சென்றார்கள்.
அம்மாவுடன் செல்லும்போது நாமெல்லாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நமக்கெல்லாம் இது ஒரு பாடம். நம் மீது தவறில்லையென்றால் கூட நமக்கு வாக்குவாதம் தேவையில்லை என்பது படிப்பினை.
அன்றைய தினம் அம்மா அவர்கள் தன் கடமையை எப்படிச் செய்து ஒரு இனிமையான முடிவைத் தந்தார்கள் பார்த்தீர்களா?
“என்னையே நினைத்துச் சரணடைபவனை இளகிய வெண்ணெயில் விழுந்த ஈ போல் அணைப்பேனடா மகனே!”
என்று அன்னை கூறுவது எவ்வளவு பொருத்தம்.
அன்று முழுவதும் அம்மாவின் முகபாவனைகள் இதுவரை நாம் கண்டிராதது. அதற்கு அர்த்தம் விளக்க நம்மால் இயலாது.
அதற்கடுத்த நாள் காலையிலேயே அம்மா அவர்கள் புறப்பட உத்தரவிட்டு விட்டார்கள்.
ஒவ்வொரு பயணத்திலும் அம்மாவுடைய ‘காரினை’ பைலட் வண்டிகள் வழிநடத்திச் செல்லும். ஆனால் அன்று அம்மாவினுடைய வாகனம் அனைவருக்கும் முன்சென்று அனைவரையும் வழி நடத்திச் சென்றது.
திடீரென்று அம்மாவின் கார் 100 கி.மீ. வேகத்தில் செல்லும். ஒரு சில இடத்தை 80 கி.மீ வேகத்தில் கடக்கும்.
அம்மா 100 கி.மீ வேகத்தில் ஒரு இடத்தைக் கடக்கும் பொழுது அப்பொழுதுதான் ஒரு வன்முறைக் கும்பல் கல்லெறிய வந்து கொண்டிருக்கும். அக்கும்பல் கல்வீசுவதற்குள் வாகனங்கள் கடந்துவிடும்.
இன்னொரு இடத்தில் மரத்தை வெட்டிப் போட்டிருப்பார்கள். அம்மா 40 கி.மீ வேகத்தில் மெதுவாகச் செல்வதற்கும் அவர்கள் புறப்பட்டுப் போவதற்கும் சரியாக இருக்கும்.
அம்மாவின் வாகனமோ எந்தவித இடையூறுமின்றி அலுங்காமல் குலுங்காமல் அற்புதமாய்ச் சென்று கொண்டிருந்த கோலம் கண்டு மகிழ்வுறத்தக்கது. உண்மையில் சொல்லப்போனால் அது ஒரு ‘த்ரில்லிங்’கான பயணம்.
