Back to Articles

அம்மா திருப்பிக் கொடுத்த உயிர்

எங்கள் குடும்பத்தார் அனைவரும் 1982ம் ஆண்டு முதல் அம்மாவின் பக்தர்கள்.

2001ம் ஆண்டு கம்பம் பகுதியில் ஆன்மிகப் பயணம் மேற்கொண்டு அம்மா வந்தார்கள். எங்கள் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு எங்கள் வீட்டிற்கு வந்தார்கள்.

குடும்பத்தோடு பாதபூஜை செய்தோம். அப்போது என் கணவர் சிவகங்கை அரசு கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார்.

“நீ உன் வேலையை ராஜினாமா செய்! இந்த வீட்டை உடனே இடித்துக் கட்டு! பையனுக்கு கல்யாண ஏற்பாடு செய்! உன் பையனை வெளிநாடு அனுப்புகிறேன்!”

பாத பூஜையை ஏற்றுக் கொண்ட அம்மா என் கணவரைப் பார்த்துச் சொன்னார்கள்.

அந்த ஆண்டு சித்திரைப் பௌர்ணமி வேள்வியில் கலந்து கொண்டு மதுரையில் நாங்கள் தங்கியிருந்த வீட்டிற்கு வந்தோம்.

05.05.2001ம் வருடம் நடந்த சம்பவம் இது. நானும் என் கணவரும் எங்கள் குடும்ப டாக்டர் ஒருவரின் வீட்டிற்குச் சென்று இரவு 9 மணியளவில் கே.கே. நகரில் உள்ள ஜவகர் மருத்துவமனை அருகில் ஸ்கூட்டரில் திரும்பி வந்து கொண்டிருந்தோம்.

நான் தற்செயலாகத் திரும்பிப் பார்த்த போது ஒரு ஆட்டோ 50 அடி தொலைவில் வந்து கொண்டிருந்தது. அந்த ஆட்டோ எங்கள் மேல் மோதப்போகிறது என்று என் உள் மனம் கூறியது.

அதற்குள் அந்த ஆட்டோ எங்கள் வண்டி மீது மோதியேவிட்டது.

நான் தட்டுத்தடுமாறி எழுந்து நின்று பார்க்கிறேன், என் கணவர் நடுரோட்டில் தலை கவிழ்ந்து குப்புற விழுந்து கிடக்கிறார். அவரது நெற்றிப் பொட்டில் நல்ல அடி. அந்த நேரம் ரோட்டில் யாரும் இல்லை.

நான் மட்டுமே தனியாக அவரை தூக்கி உட்கார வைத்தேன். அவரது கால்கள் இரண்டும் உணர்ச்சியில்லாமல் கிடந்தன. தலைகீழே தொங்கியது. நான் எழுந்திருங்கள் என்றேன். தலை தொங்கிக் கிடக்கிறது. உயிர் இல்லை என்று உணர்ந்தேன்.

அடுத்த கணம் என் தாலி செயினோடு மாட்டியிருந்த அம்மாவின் டாலரைக் கையில் எடுத்து என் கணவரின் நெஞ்சின்மீது வைத்து ‘அம்மா இத்தனை வருடங்களாக நாங்கள் இருவரும் உன்னையே நம்பித்தான் வாழ்கிறோம். நீ என்ன செய்வாயோ தெரியாது. என் கணவரின் உயிரைத் திருப்பிக் கொடு’ என்று கண்ணீர் மல்க விம்மல்களோடு அவர் உடலை என் கைகளால் உலுக்கினேன்.

திடீரென்று தலையை ஒரு சிலிர்ப்பு சிலிர்த்து விட்டுக் கண் விழித்தார். அதன் பிறகே என் சத்தம் கேட்டு நான்கு பேர் அருகே வந்து அவரைத் தூக்கினார்கள்.

அவரோ என்னை அடையாளம் தெரியாதவர் போல விழித்தார். உடனே அவருக்கு மூளையில் அடிபட்டு ஞாபக சக்தி போய் விட்டதோ என்று பயந்து அங்கிருந்தவர்களிடம் இவரைப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு ‘அம்மா என் கணவருக்கு ஒன்றும் ஆகக்கூடாது’ என்று கத்திக் கொண்டு எங்கள் குடும்ப டாக்டர் வீட்டுக்கு ஓடினேன்.

டாக்டர் விரைந்து சென்று என் கணவரைக் கைத்தாங்கலாகப் பிடித்துக் கொண்டு வீட்டில் படுக்க வைத்தார். முதல் உதவி சிகிச்சைகள் அளித்தார்.

என் கணவருக்கு நெஞ்சின் மேல் உள்ள எலும்பு ஒன்று ஒடிந்திருந்தது.

அப்போது அங்கிருந்த டாக்டரின் மகன், ‘அம்மா... இந்த ஆன்ட்டி கையும் வீங்கியிருக்கிறது பாரு’ என்று கூறியபோதுதான் என் கையில் வலி ஏற்பட்டதையும், என் கை வீங்கியிருப்பதையும் உணர்ந்தேன்.

இதில் அம்மா மேலும் செய்த அனுகூலம் என்னவென்றால் இந்த விபத்து எங்கள் குடும்ப டாக்டர் வீட்டுக்கு அருகிலேயே நடந்தது. பக்கத்தில் மருத்துவமனை.

அம்மாவின் அருள், அம்மாவின் சக்தி, அம்மாவின் டாலர் இவற்றால்தான் என் கணவர் உயிர் மீண்டது.

பட்டகாலிலேயே படும் என்பதற்கேற்ப 5.5.2001 அன்று விபத்தில் சிக்கிய என் கணவர் உயிர் பிழைத்த அற்புதம் நடந்த பிறகு 18.5.2003 அன்று நடந்த சம்பவம் இது.

அதாவது இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடந்தது.

எங்கள் கிராமத்தில் உள்ள தோட்டத்தைப் பார்க்க என் கணவர் வீட்டின் முன் உள்ள ரோட்டில் நின்று கொண்டிருந்தார். ஒருவர் வீட்டுக்குள் ஓடிவந்து, ‘அம்மா! உங்கள் கணவரைக் கருநாகம் கடித்து விட்டது. வாங்க! வாங்க!’ என்றார்.

நான் ஓடிச் சென்று பார்ப்பதற்குள் அவரே வீட்டிற்கு நடந்து வந்து சிலை மாதிரி அமர்ந்து கொண்டார்.

மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்குள் தாங்குமோ தாங்காதோ என்று பைக்கில் நடுவில் உட்கார வைத்துக் கொண்டு பறந்தனர்.

அவர்கள் போன அடுத்த நிமிடம் என் கண்ணில் அம்மாவின் சக்தி ஒளி புத்தகம்தான் தென்பட்டது.

அதை எடுத்து நெஞ்சில் பிடித்து கண்ணை மூடிக் கொண்டு நான் சொன்ன ஒரே மந்திரம், ‘அம்மா! தாயே! என் கணவரின் உடலில் இருந்து விஷத்தை இறக்கு’ என்பது மட்டுமே.

ஒரு மணி நேரம் நான் மூடிய கண்ணைத் திறக்கவில்லை. சக்திஒளியையும் நான் விடவில்லை. மந்திரத்தையும் நிறுத்தவில்லை.

ஒருமணி நேரம் கழித்து ஓர் ஆள் ஓடி வருகிறார். ‘அம்மா உங்கள் கணவர் நன்றாக இருக்கிறார்! இரவு மருத்துவமனையிலேயே தங்கவேண்டும் என்கிறார்கள், வாருங்கள்’ என்றார்.

நான் போய்ப் பார்த்தபோது என் கணவர் சொன்னது என் காதுக்குள் இன்றும் ஒலிக்கிறது.

“எங்கள் வீட்டுக்கும், மருத்துவமனைக்கும் 3 கி.மீ தூரம். அரைமணி நேரமாக நுரை தள்ளவில்லை, மயக்கம் இல்லை, எந்த தொந்தரவும் இல்லை... என்னைக் கொத்திய அந்தக் கருநாகத்தைப் பார்த்த அடுத்த விநாடி நம் உயிர் அவ்வளவுதான், நமது முடிவுகாலம் நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்தவுடன் எனக்கு மனைவி, மக்கள் யாரையும் நினைக்கவில்லை. மூலமந்திரம், குருபோற்றி, திருவடி போற்றி, அம்மா போற்றி என்ற மந்திரங்கள் தவிர வேறும் எதுவும் கூடவில்லை.”

எண்ணிப் பாருங்கள் கருநாகம் கடித்துப் பிழைத்த உயிர் உலகத்தில் உண்டா? அடுத்து அம்மாவிற்குப் பாதபூஜை செய்தபோது அம்மா சொன்னார்கள், “நீங்கள் இருவரும் செய்த தொண்டிற்காக உயிர்ப்பிச்சை கொடுத்தேன்”

எங்கள் குடும்பம் அனுபவிக்கும் ஒவ்வொரு சந்தோஷமும் அம்மா எங்களுக்குப் போட்ட உயிர்ப்பிச்சை.

ஓம் சக்தி!